கோலாலம்பூர், பிப்ரவரி.11-
பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத் திட்டம் எப்போதும் கட்சி அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாகவே இருக்கும் என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இன்று மக்களவையில் உரையாற்றிய கல்வி துணையமைச்சர் வோங் கா வோ, வரலாற்றுப் பாடத் திட்டத்தைத் துல்லியமாகவும், சமநிலையாகவும் மற்றும் பொருத்தமானதாகவும் வைத்திருப்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது என்று கூறினார்.
பாடத்திட்டம் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்று மூவார் எம்.பி. சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வோங் கா வோ, “இதுவே கல்வி அமைச்சின் நிலையான கொள்கை" என்றார்.
ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருந்தாலும், "வரலாற்றை அரசியல் கண்ணாடி கொண்டு பார்ப்பது" பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என சையிட் சாடிக் முன்னதாக எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த வோங் கா வோ, குறிப்பிட்ட பாடங்களுக்குத் தேவை இருக்கும் பட்சத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுவதாகக் கூறினார். மேலும், "பாடத் திட்டம் தேசியக் கல்விக் கொள்கையுடன் ஒத்துப் போவதையும் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு சமநிலையாக இருப்பதையும் அமைச்சு எப்போதும் உறுதிச் செய்கிறது," என்றும் அவர் விளக்கினார்.








