ஹல்லோவின் மாதத்தை முன்னிட்டு, சன்வே லகூனில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘நைட்ஸ் ஓஃப் ஃபிரைட்’ திகில் விழா 12-வது ஆண்டாக நேற்று தொடங்கியது.
இவ்வாண்டு ‘Ape-ocalypse’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், மனிதர்களை வேட்டையாடும் ராட்சத குரங்குகளை மையமாகக் கொண்ட திகில் அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கருப்பொருள் பிளேனட் ஓஃப் தெ ஏப்ஸ் மற்றும் மேட் மெக்ஸ் திரைப்படத் தொடர்களின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விழாவின் படைப்பாக்க இயக்குநர் லிண்டன் வி. ஹாரிஸ் தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் 9 திகில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றும் வெவ்வேறு திகில் கதைகள் மற்றும் காட்சியமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மலேசியா மற்றும் ஆசியான் கலாசாரக் கதைகள், ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகள், மங்கா மற்றும் கே-போப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, பார்வையாளர்களுடன் திகில் கதாபாத்திரங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் 3 திகில் பகுதிகளும், திகில் கருப்பொருளில் மாற்றப்பட்ட 11 சன்வே லகூன் சவாரிகள் மற்றும் இரவு நேர நேரடி கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
‘நைட்ஸ் ஓஃப் ஃபிரைட் 12’ செப்டம்பர் 25 முதல் நவம்பர் 7, 2026 வரை ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.








