Sep 27, 2026
Thisaigal NewsYouTube
28 ஆண்டுகளுக்குப் பிறகு கெடாவில் ரேபிஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

28 ஆண்டுகளுக்குப் பிறகு கெடாவில் ரேபிஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு

Share:

கெடா மாநிலத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் மனித ரேபிஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

குபாங் பாசு பகுதியைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய் கடித்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாய் கடித்த பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதிலும், ரேபிஸ் தடுப்புக்கான சிகிச்சையை அவர் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி அவருக்கு சோர்வு, உடல் பலவீனம் மற்றும் வலது கையில் உணர்வின்மை ஏற்பட்டது.

பின்னர் விழுங்குவதில் சிரமம், தண்ணீரைக் கண்டால் அச்சம், காற்றைத் தவிர்க்கும் நிலை, பதற்றம் மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News