கோத்தா பாரு, நவம்பர்.15-
குரங்கு ஒன்றைத் துன்புறுத்திய சம்பவம் தொடர்பான காணொளி வைரலானதைத் தொடர்ந்து இந்த அட்டூழியத்தைப் புரிந்ததாக நம்பப்படும் இரு நபர்களைக் கிளந்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
குரங்கு சித்ரவதை செய்யப்படும் காட்சியைக் கண்டு, வெகுண்டு எழுந்த மக்களின் புகாரைத் தொடர்ந்து 24 மற்றும் 28 வயதுடைய இரு நபர்கள் நேற்று இரவு 10 மணியளவில் கிளந்தான், ஜெலாவாங்கில் கைது செய்யப்பட்டனர் என்று பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
அவ்விரு நபர்களும் 1953 ஆம் ஆண்டு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








