கோலாலம்பூர், நவம்பர்.26-
ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவைப் பிடிப்பதற்கு அரச மலேசியப் போலீஸ் படை, குடிநுழைவுத்துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்குச் செல்ல முகமட் ரிடுவானுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பயணத் தடையின் நிலையை உறுதிப்படுத்த மலேசிய குடிநுழைவுத்துறையின் ஒத்துழைப்பை போலீஸ் துறை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முகமட் ரிடுவானைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேளையில் விசாரணைகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மடானி அரசாங்கத்தின் பூடி95 பெட்ரோல் சலுகை மற்றும் சாரா உதவித் திட்டம் முதலிய சலுகைகளை முகமட் ரிடுவான் அனுபவித்து வருவதாகக் கூறப்படுவது குறித்தும் கூடுதல் விசாரணையில் அடங்கும் என்று ஐஜிபி தெரிவித்தார்.
முகமட் ரிடுவானைப் பிடிப்பதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது வாரண்டு உத்தரவை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டையும் போலீஸ் படை கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் விளக்கினார்.
குறிப்பாக, முகமட் ரிடுவானிடம் உள்ள இந்திராகாந்தியின் மகளை மீட்டெடுக்கும் கடப்பாட்டை போலீஸ் படை கொண்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்துள்ளார்.








