ஈப்போவில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை போலீசார் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரையில் இரு ரோந்துக் கார்களில் துரத்திச்சென்று பிடித்துள்ளனர். அந்த இரு கொள்ளையர்களும் ஈப்போவிருந்து தெலுக் இந்தான், லாபு குபோங், சென்டெரோங் போலீஸ் நிலையம் வரை விரட்டிச் செல்லப்பட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்தது. பாராங்கை ஆயுதமாக கொண்ட அந்த இரு நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் புரோடுவா மைவி காரில் தப்பிச் சென்று விட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து ஈப்போ, போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அகமட் அட்னான் குறிப்பிட்டார்.
கம்போங் காஜா வழியாக தப்பிய அவ்விருவரின் புரோடுவா மைவி காரை அடையாளம் கண்ட போலீஸ் குழுவினர் , தெலுக் இந்தான் வரை துரத்திச் சென்று அவர்களை இரு வெவ்வேறு இடங்களில் வளைத்துப் பிடித்தனர்.
28 , 31 வயதுடைய அநத் இரு நபர்களில் ஒருவருக்கு வலதுப்புற தோள் பட்டையில் துப்பாக்கி சூடு பாய்ந்து காயமுற்றார். அவர் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிடிபட்ட இருவரில் ஒருவருக்கு 24 குற்றச்செயல்களும், மற்றொருவருக்கு 11 குற்றச்செயல்களும் போலீஸ் பதிவில் இருப்பதாக ஏசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.








