சரவாக்கில் கடந்த மாதம் ஐந்து பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், ஹெலிகாப்டரின் பராமரிப்புப் பதிவுகளும் நிர்வாக நடைமுறைகளும் ஒழுங்காக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதை இயக்கிய லாயாங் லாயாங் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஹான் பூங் அப்துல்லா, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஆய்வில் எழுப்பப்பட்ட மூன்று பிரச்சினைகளும் விமானப் பொறியாளர்களின் பராமரிப்புப் பணிகளுடன் தொடர்புடையவை அல்ல என்று கூறினார்.
பராமரிப்புப் பணியாளர் திட்டமிடல், குறிப்பிட்ட பராமரிப்புச் சோதனைகளின் பதிவுகள், அவசரநிலைக்குப் பிறகு செயல்பாடுகளைத் தொடர்வதற்கான எழுத்துப்பூர்வ நடைமுறைகள் ஆகியவை தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவற்றில் இரண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும், பணியாளர் தேவையைக் கணக்கிடும் முறை தொடர்பான விவகாரம் இறுதிச் சரிபார்ப்பில் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.








