லாவோஸ் நாட்டில் 521 கிலோ மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் விமானத்தில், போதைப்பொருள் அடங்கியதாக கண்டறியப்பட்ட 23 பைகள், சுபாங் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படவில்லை என அந்த விமானத்தை இயக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சிஜிடி ஆசியா பிடிஇ எல்டிடி (CGT Asia Pte Ltd) என்ற அந்த நிறுவனம், அந்த விமானம் சுபாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லாவோசின் லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் பிலிப்பைன்சின் மணிலா நகரில் உள்ள நினோய் அகுய்னோ அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் சுபாங் விமான நிலையத்துக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி, சுபாங் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானத்தில் ஏறிய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பயணி ஒருவர், தன்னிடம் கைப்பை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தனது பயணப் பொதிகளை லாவோசில் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் அந்த பயணி விமானக் குழுவினரிடம் தெரிவித்திருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்தப் பொதிகளில் வேப் பொருட்கள் இருப்பதாகவும், சுங்க அனுமதி நடவடிக்கைகளை தானே மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், சுமார் 23 பொதிகள் இருக்கும் என்பது குறித்து விமானக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருந்ததாகவும் சிஜிடி ஆசியா பிடிஇ எல்டிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.








