குவா மூசாங், டிசம்பர்.19-
கிளந்தான் குவா மூசாங் பகுதியில் உள்ள Pos Gob கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 ஓராங் அஸ்லி மாணவர்கள், பள்ளி இறுதித் தவணை விடுமுறைக்காகத் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப நகரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.
கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக Pos Gob கிராமத்திற்குச் செல்லும் பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கிளந்தான் மாநிலத்தில் நேற்று பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில், போக்குவரத்து வாகனங்கள் கிராமத்திற்கு வர முடியாததால், மாணவர்கள் வேறு வழியின்றி நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அடர்ந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லத் துணிந்தனர்.
குவா மூசாங் நகரத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ள ஓராங் அஸ்லி குடியிருப்புகளில் ஒன்றாக Pos Gob கருதப்படுகிறது. இந்தப் பயணம் மிகவும் சவாலானதாகவும் ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.








