கோலாலம்பூர், செப்டம்பர்.19-
கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், செந்தூலில் மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட மானபங்கம் சம்பவம் மற்றும் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பில் புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் நேற்று வியாழக்கிழமை ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த மூன்று போலீஸ்காரர்களையும் நான்கு நாட்கள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை காலையில் ஜாலான் செந்தூல் பசாரில் சம்பந்தப்பட்ட மாணவியையும், அவரின் காதலனையும் தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அந்த மாணவியுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்புவதாகவும், இல்லையேல் 10 ஆயிரம் ரிங்கிட் கொடுக்கும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு போலீஸ் அதிகாரி, அந்த மாணவியை மானபங்கம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அந்த மாணவி அளித்த போலீஸ் புகார் அறிக்கையில் நகல், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.








