யோங் பெங் பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைரோலின் மர்ம மரணம் தொடர்பாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தை மாணவியின் குடும்பத்தினர் எதிர்கொள்ளத் தேவையான வலிமையும் மனத்திடமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவியின் மரணத்திற்கான காரணத்தையும், உண்மையில் என்ன நடந்தது? என்பதையும் கண்டறிய உடனடியாக வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதில் குற்றச்செயலுக்கான கூறுகள் இருப்பது தெரியவந்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என்றும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








