கோலாலம்பூர், அக்டோபர்.02-
நாட்டில் உயர்மட்ட அளவிலான ஊழலை எதிர்த்துப் போராடுவதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அசூர தைரியம் கொண்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
எஸ்பிஆர்எம் எதற்காக அசூர தைரியம் கொண்டு இருக்க வேண்டுமானால், இது பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நலன்களைக் கொண்ட ஒரு பெரிய எதிரியை உள்ளடக்கியது. அந்த எதிரியை அடையாளம் காணவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் எஸ்பிஆர்எம் அசூர துணிச்சலைக் கொண்டு இருப்பது அவசியமாகும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள ஒரு சிறிய ஊழல் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கை அதிக ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மிகவும் சவாலானவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஆயிரம் ரிங்கிட் முதல் 5 ஆயிரம் ரிங்கிட் வரை ஊழல் புரிந்ததற்காக மாவட்ட அலுவலகத்தில் உள்ளவரை கைது செய்வதில் ஆபத்து இல்லை. ஆனால் பில்லியன் கணக்கான ரிங்கிட் ஊழல் சம்பந்தப்பட்ட எதிரியை பிடிப்பதுதான் மிக சவாலானது. அந்த இடத்தில்தான் எஸ்பிஆர்எம் துணிந்து போராட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம்மின் 59 ஆவது ஆண்டு விழா மற்றும் கிப் மலேசியா கிளின் எனும் பிரச்சார இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நபர்களிடம் எஸ்பிஆர்எம் விசாரணை செய்வது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சர்ச்சை செய்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்காக உழைத்தவர், உடல் சுகவீனப்பட்டவர் என்று எதிர்க்கட்சியினர் முலாம் பூசுகின்றனர்.
நாட்டிற்கு அனைவருமே தியாகம் செய்துள்ளனர். குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் ஒரு துப்புரவுப் பணியாளர் கூட தியாகிதான். அதற்காக அவர் புரியக்கூடிய ஊழலை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? என்று பிரதமர் வினவினார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது அரசியல் நலன்களைப் பற்றியது அல்ல, மாறாக நாட்டைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பையும், கடப்பாட்டையும் கொண்டது என்று பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் எஸ்பிஆர்எம் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உட்பட எஸ்பிஆர்எம் உயர் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.








