ஈப்போ, டிசம்பர்.29-
பேராக் மாநிலம், கோல கங்சார் பகுதியில் உள்ள கம்போங் கெலெபோர் கிராமத்தில் நேற்று மாலை நிகழ்ந்த, தொலைத்தொடர்பு கோபுரத் தீ விபத்திற்கான காரணம் குறித்து, தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் காரணமாக CelcomDigi, Maxis மற்றும் Unifi Mobile ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் பயனர்களுக்கு தற்காலிகமாகச் சேவை பாதிப்பு ஏற்பட்டதாகவும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை 6.36 மணிக்கு நடந்த இச்சம்பவம் குறித்து, தகவல் கிடைத்த உடனேயே, கோல கங்சார் தீயணைப்பு நிலையத்திலிருந்து, மீட்புக் குழுவானது சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் ஹனாஃபியா தெரிவித்தார்.
தீப்பற்றிய கோபுரமானது, வடக்கு–தெற்கு விரைவுச் சாலையிலிருந்து தெளிவாகக் காணப்பட்ட நிலையிலும் கூட, கொடுக்கப்பட்ட முகவரி துல்லியமாக இல்லாததால் சம்பவ இடத்தை அடைவதில் மீட்புக் குழுவினருக்குத் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், சேவைகளை முழுமையாக மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.








