- சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் திட்டவட்டம்
தடுப்புக் கைதிகளை விசாரணையின்றி ஒரு நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு வகை செய்யும்
சொஸ்மா எனப்படும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை அகற்றும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும் சொஸ்மா சட்டத்தை வளப்படுத்தும் வகையில் கட்டம், கட்டமாக சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ராம் கர்ப்பால் குறிப்பிட்டார். இன்று காலையில் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராம் கர்ப்பால் இதனை தெரிவித்தார்.
சொஸ்மா கைதிகளை விடுவிக்கக் கோரி அல்லது அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி, சம்பந்தப்பட்ட கைதிகளின் 50 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், கடந்த அகஸ்ட் முதல் தேதி, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே 3 நாள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுபட்டிருந்தனர். அந்த கொடுங்கோல் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே சந்தித்த துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், சொஸ்மா சட்டத்தை மேம்படுத்துவதற்கான சில பரிந்துரைகள் வெகுவிரைவில் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.
2012 ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தில் சில திருத்தங்களை செய்வது குறித்து அரச மலேசியப் போலீஸ் படையும், சட்டத்துறை அலுவலகமும் ஆராய்ந்து வருவதாக ராம் கர்ப்பால் குறிப்பிட்டு இருந்தார்.








