இன, மத அடிப்படையிலான குற்றங்களைக் கையாள தனிச்சட்டம் கொண்டுவரும் திட்டம் உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதுதொடர்பான பரிந்துரைகளை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வைக்குமாறு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கிடம் சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் கேட்டுக் கொண்டார்.
சிங்கப்பூரின் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தைப் போன்று மலேசியாவிலும் சட்டம் இயற்றுவது குறித்து ராம்கர்பால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அஸாலினா, இதுபோன்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று குறிப்பிடவில்லை.
எனினும், இன, மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வெறுப்பு, பகைமை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்கள் அல்லது உள்ளடக்கங்களை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
இதன் தொடர்பில் பதில் அளித்த தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டகாங், இவ்விவகாரத்தில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு நேரடி அமலாக்க அதிகாரம் இல்லை என்றும், இனம் மற்றும் மதம் தொடர்பான தூண்டுதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சு, போலீஸ் துறை, தொடர்புத்துறை அமைச்சு, மற்றும் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிங்கப்பூரின் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








