ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.15-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கத்தை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமது முகநூலில் அக்மால் வெளியிட்டுள்ள வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோ தொடர்பாக அவருக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கம் கொண்டதாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாக புக்கிட் மெர்தாஜம் காவல்துறைக்கு கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி புகார் கிடைத்ததாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ அஸிஸி இஸ்மாயில் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சமூகத்தினரிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றும் பொது அமைதியைச் சீர்குலைக்கும் சக்தி கொண்ட வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கம் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
இதன் தொடர்பில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் அக்மாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக டத்தோ அஸிஸி இஸ்மாயில் மேலும் கூறினார்.
இந்த வழக்கை பினாங்கு போலீசார் கையாண்ட வேளையில் இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அதனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி பிரிவு நேரடியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.








