கோலாலம்பூர், செப்டம்பர்.07-
மலேசியாவில் உள்ள மருத்துவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிட்டு, சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 'ஆன்-கால்' எனப்படும் பணி நேரத்திற்குப் பிந்தைய பணிக்கான ஊதியம் தொடர்பாக, சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 21 வகையான படிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மலேசிய மருத்துவச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 21 படிகளில் மிகச் சில மட்டுமே இளம் மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும், இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், Hartal Doktor Kontrak என்ற அமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் படிகளையும், மருத்துவர்களின் ஊதியத்தையும் ஒப்பிட்டு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டுமே 400 ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு மருத்துவரோ 24 மணி நேரம் பணி புரிந்து ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்கு 200 ரிங்கிட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் படிகள், மருத்துவர்களின் ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சமமற்ற ஊதிய முறை காரணமாக, பல இளம் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், இது தொடர்ந்து நடந்தால் மலேசிய மக்களுக்குத்தான் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.








