May 5, 2026
Thisaigal NewsYouTube
சோகமான முகத்துடன் சிறைச்சாலைக்குச் சென்றார் இசா சமாட் - சுங்கை பூலோவில் தண்டனை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

சோகமான முகத்துடன் சிறைச்சாலைக்குச் சென்றார் இசா சமாட் - சுங்கை பூலோவில் தண்டனை தொடக்கம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.10-

ஃபெல்டா (Felda) முன்னாள் தலைவரும் நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாருமான டான் ஶ்ரீ முகமட் இசா அப்துல் சமாட், ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக, இன்று மதியம் மிகுந்த சோகமான முகத்துடன் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 3.25 மணியளவில் போலீஸ் வாகனத்தில் அவர் ஏறிய போது அங்கிருந்த கேமராக்களில் அவரது முகம் மிகுந்த வாட்டத்துடன் காணப்பட்டது.

77 வயதான இந்த முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார், தன்னை வழி அனுப்ப வந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து மெலிதாகக் கையசைத்தபடி, கனத்த இதயத்துடன் சிறையை நோக்கிப் பயணித்தார்.

ஹோண்டா சிட்டி ரக போலீஸ் வாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரது மனைவி புவான் ஶ்ரீ பிபி ஷர்லிசா மற்றும் பிள்ளைகள் கண்ணீர் மல்க அவரை வழி அனுப்பினர்.

ஒரு ஹோட்டல் கொள்முதல் விவகாரத்தில் 3 மில்லியன் ரிங்கிட் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இசா சமாட், இந்தத் தீர்ப்பின் காரணமாக வரும் ரமலான் மற்றும் ஷவ்வால் பெருநாள் மாதங்களைச் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Related News