Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்திய தொழில்முனைவர்களுக்கான I- BAP ஐ- பாப் திட்டத்தின் நிதி 10 மில்லியனாக உயர்த்தப்படும்: துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தகவல்
தற்போதைய செய்திகள்

இந்திய தொழில்முனைவர்களுக்கான I- BAP ஐ- பாப் திட்டத்தின் நிதி 10 மில்லியனாக உயர்த்தப்படும்: துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தகவல்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-

இந்திய சிறு,குறு, நடுத்தர இந்திய தொழில் முனைவர்களுக்கான எஸ்எம்இ கோர்ப். ஐ-பாப் திட்டத்தின் நிதியை 10 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

எஸ்எம்இ கோர்ப். ஐ-பாப் திட்டத்தின் கீழ் தற்போது 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி உதவி கேட்டு இந்திய சிறு,குறு, நடுத்தர இந்திய தொழில்முனைவர்களிடமிருந்து அதற்கான விண்ணப்பக் கோரிக்கை 8 மில்லியன் ரிங்கிட் வரை வந்துள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இதனால் அடுத்தாண்டு இந்த நிதியை 10 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தும் முயற்சிகள் தற்போது முழு வீச்சாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.

இது தொடர்பான கோரிக்கை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

நேற்று கோலாலம்பூர், எஸ்எம்இ கோர்ப். மலேசியா தலைமை அலுவலகத்தின் டேவான் மாக்கோத்தாவில் நடைபெற்ற எஸ்எம்இ கோர்ப். ஐ-பாப் திட்டத்தின் 31 இந்திய நிறுவனங்களுக்கு சலுகைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு அதன் துணை நிறுவனமான எஸ்எம்இ கோர்ப். வாயிலாக இந்தியர்களுக்குச் சொந்தமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து உறுதிப் பூண்டு இருப்பதையும் டத்தோ ஶ்ரீ ரமணன் சுட்டிக் காட்டினார்.

அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் எஸ்எம்இ கோர்ப். ஐ-பாப் திட்டத்தின் கீழ் இன்று வரை 35 இந்திய நிறுவனங்களுக்கு மொத்தம் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

எஸ்எம்இ கோர்ப். ஐ-பாப் திட்டத்தின் கீழ் 31 நிறுவனங்களுக்கு 7,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரையிலான நிதி உதவி ஒதுக்கீட்டிற்கான சலுகைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இது கிட்டத்தட்ட 85 இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குப் பயனளித்துள்ளது என்பதையும் டத்தோ ஶ்ரீ ரமணன் சுட்டிக் காட்டினார்.

Related News