புத்ராஜெயா, ஜனவரி.23-
தேசியக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக 5 வயது சிறுவர்களுக்கான பாலர் பள்ளி மற்றும் 6 வயது சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கையைத் துரிதப்படுத்தவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு 6 மற்றும் 7 வயது சிறுவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வரும் சூழல் ஏற்படக்கூடும் என்பதால், கல்வி முறை அதற்குத் தயாராக இருப்பதை உறுதிச் செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று அரசாங்க செய்தி தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
தேவையான நிதி ஒதுக்கீடு, போதிய ஆசிரியர்களைத் தயார் செய்தல் மற்றும் புதிய வகுப்பறைகளைக் கட்டுதல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
புதிய வகுப்பறைகளை விரைவாகக் கட்டி முடிக்க, பொதுப்பணித் துறையுடன் இணைந்து 'தொழில்துறை கட்டுமான அமைப்பை' பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்பதையும் தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி தெளிவுபடுத்தினார்.








