கோலாலம்பூர், ஏப்ரல்.11-
கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ராவில் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய போக்குவரத்துக் காவற்படை அதிகாரி ரொஸ்லான் சாலே, அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.47 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், பெரோடுவா அஸியா கார் ஒன்று அவர் மீது பின்னால் இருந்து மோதி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.
இதில் தலையின் பின்பகுதியிலும் விலா எலும்புகளிலும் காயமடைந்த அவர் தற்போது கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் பணியைக் காவற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.








