கோலாலம்பூர், டிசம்பர்.26-
நாட்டின் இரண்டாவது பிரதமரின் மகனான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், கம்பத்து சிறுவன் அல்ல. எதையும் தெரியாததைப் போல் செயல்படுவதற்கு.
1எம்டிபி நிர்வாகத்தில் நஜீப்பை ஏமாற்றும் அளவிற்கு அவர் எடுப்பார் கைப்பிள்ளை அல்ல. எல்லாமே அவருக்கு தெரியும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுஏரா அதிரடியாக அறிவித்தார்.
மற்றவர்களை நம்பி, நஜீப் மோசம் போனார் என்று கூறப்படும் தற்காப்பு வாதத்தை நீதிபதி கோலின் லாரன்ஸ் முற்றாக நிராகரித்தார்.
நஜீப் நாட்டின் பிரதமர். பொருளாதார நிபுணர். நிதி வளத்தைக் கையாளக்கூடிய ஒரு நிதி அமைச்சர். இதற்கு மேலாக நாட்டின் பிரதான நிதி முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி – யின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
1எம்டிபி- யில் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நிகழும் போது அவர் மூன்று முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவருக்குத் தெரியாமல் எதுவும் நடத்திருக்க முடியாது. அவர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்ற வாதத்தை அறவே ஏற்க முடியாது என்று நீதிபதி கோலின் லாரன்ஸ் தெரிவித்தார்.
நஜீப்பின் பின்னணியை ஆராய்ந்த போது நுண்ணறிவு மிக்கவர். அவர் எளிதில் ஏமாற்றப்படுவதற்கு ஒரு கம்பத்து சிறுவன் அல்ல. தான் கையெழுத்திட்ட ஒவ்வொரு பத்திரமும், போலியானது அல்ல என்பதை நஜீப்பே ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன் பொருள் அனைத்து விஷயமும், நஜீப்பின் கவனத்திலிருந்து கைமீறவில்லை என்பது தெளிவாகிறது. தான் செய்த தவற்றைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதற்காக 2015 ஆம் ஆண்டில் அப்போதைய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ அப்துல் கானி படாயில் தலைமையில் அமைக்கப்பட்ட 1எம்டிபி விசாரணைக் குழுவையே நஜீப், உண்டு, இல்லை என்று முடிவெடுத்து கலைத்துள்ளார்.
சுருங்கச் சொன்னால், 1எம்டிபி விவகாரத்தில் நஜீப்பிற்கு சுய நலம் மேலோங்கியிருக்கிறது. அவரின் பிரநிதியாக செயல்பட்டவர் ஜோ லோ என்று நீதிபதி கோலின் லாரன்ஸ் தமது தீர்ப்பின் வாதத்தில் தெரிவித்தார்.








