கப்பாளா பாத்தாஸ், ஆகஸ்ட்.04-
கடந்த ஜுன் மாதம் முதல் தேதி, பினாங்கு, கப்பாளா பாத்தாஸ், ஜாலான் கெலாவாயில் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நபர் ஒருவர், விற்பனைப் பணிப்பெண் ஒருவரைக் கைத்துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் டிபிஆர் எனப்படும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தின் முடிவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவுற்றது. அறிக்கையும் டிபிஆர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டத்தோ முகமட் அல்வி கூறினார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் கடந்த ஜுன் 3 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்து இருந்தார்.
சாலையில் வாகனப் போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் 28 வயதுடைய மாதுவைத் துப்பாக்கிக் கட்டையால் அந்த டத்தோ தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் அந்த டத்தோவின் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.








