ஷா ஆலாம், செப்டம்பர்.07-
எஸ்பிஎம் தேர்வு என்பது மாணவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் தெரிவித்துள்ளார்.

ஷா ஆலம் ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கோத்தா கெமுனிங் எஸ்பிஎம் இறுதி ஊக்குவிப்பு திட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் தான் மாணவர்கள் வாழ்வில் உயர்கல்வி, தொழில் வாய்ப்புகள், எதிர்கால இலக்குகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அரசாங்கம் கல்வியை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் தலைமுறையினர் தான் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவும், தேசத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடியவர்களாகவும் இருக்கப் போகிறார்கள். எனவே இச்சவால்களை அவர்கள் தனியாக எதிர்கொள்ளும்படி நாம் விட்டுவிடக் கூடாது.

உள்கட்டமைப்பு, கற்பிற்கும் ஆசிரியர்கள், மேம்பாட்டுத் திட்டங்கள் என அனைத்திலும் அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.








