Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அன்னப்பூரணியின் மரண விசாரணை முடிவு ஏற்றுக்கொள்ள முடியாது, புதிய விசாரணை தேவை
தற்போதைய செய்திகள்

அன்னப்பூரணியின் மரண விசாரணை முடிவு ஏற்றுக்கொள்ள முடியாது, புதிய விசாரணை தேவை

Share:

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலிருந்து தமது கணவருடன் பினாங்கிற்கு வந்தபோது, மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், வெறும் எலும்புக்கூடு மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்ட ஓர் ஆஸ்திரேலியப் பிரஜையான அன்னப்பூரணியின் மரண விசாரணை முடி​வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டின் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் எவ்வாறு காணாமல் போனார், அவருக்கு என்ன நேர்ந்தது? அவர் எவ்வாறு எலும்புக்கூடாக கண்டு பிடிக்கப்பட்டார் என்பது தங்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று தென் ஆஸ்திரேலியா சட்ட மன்ற உறுப்பினர் ஃபிராங்க் பங்காலோ கேட்டுக்கொண்டார். அன்னப்பூரணி மரணம் தொடர்பில் பினாங்கில் நடந்த விசாரணை ஒரு நாடகம், கண்துடைப்பு என்று அந்த எம்.பி. வர்ணித்துள்ளார்.

பேரா, பாரிட் புந்தாரில் பிறந்து வளர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள 65 வயதான அன்னப்பூரணி என்ற அன்னா ஜென்கின்ஸ் என்ற அந்த மாதுவின் மரணம் தொடர்பில் நடைபெற்ற விசாரணையில் அவர் எவ்வாறு காணாமல் போனார் என்பதை துல்லியமாக ​தீர்மானிக்க இயலவில்​லை என்று பினாங்கு மரண விசாரணை ​நீதிமன்றம் நேற்று தனது ​தீர்ப்பில் தெரிவித்தது.

போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அவரின் மரணம் குறித்து துல்​லியமாக கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மரண விசாரணை ​நீதிபதியாக செயல்பட்ட நோர்சல்லாஹ் ஹம்சா தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கிற்கு வந்த அன்னப்பூரணி, தாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து தனி ஒரு நபராக வெளியே சென்ற போது மர்மமான முறையில் காணாமல் போனார்.
அன்னப்பூரணி ஊபர் வாகனத்தில் இறங்கியதாக கூறப்படும் இடத்திலிருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில், ஒரு கட்டுமான தளத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் எலும்புக் கூடு கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் இறப்பு தொடர்பில் இந்த மரண விசாரணை நடைபெற்றது.

Related News