கோலாலம்பூர், செப்டம்பர்.17-
டோஹாவில் நடைபெற்ற அரபு-இஸ்லாமிய அவசர உச்சி மாநாட்டில், பாலஸ்தீன விவகாரம் குறித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உறுதியான நிலைப்பாடும், அவர் ஆற்றிய உரையும், சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
அன்வாரின் உரையானது நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ஒரு நாட்டின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் துறை துணையமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், அன்வாரின் உரை மிகத் தெளிவாகவும், பாலஸ்தீனப் பிரச்சினைகளுக்கான நடைமுறைத் தீர்வாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காஸாவிற்குத் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வரும் மலேசியா, அவர்களுக்காக பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்து வருவது, அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட மலேசியாவின் ஆதரவாகப் பார்க்கப்படுவதாகவும் ஸுல்கிஃப்லி ஹசான் குறிப்பிட்டுள்ளார்.








