சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் மேற்கு கரையோர நெடுஞ்சாலையான லெபோராயா பெர்சியாரான் பந்தாய் பாராட்டின் செக்ஷன் 6 ஐ, பயன்படுத்துகின்ற வாகனமோட்டிகள் நாளை நவம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரையில் இலவச டோல் கட்டண சலுகையை அனுபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஷன் 6 என்பது கிள்ளான், பன்டார் புக்கிட் ராஜா உத்தாரா விலிருந்து கோலசிலாங்கூர், அசாம் ஜாவா வரைக்குமான நெடுஞ்சாலையாகும். 43 நாட்களுக்கு எவ்வித டோல் கட்டணமும் விதிக்கப்படாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தொ ஶ்ரீ நந்தா லிங்கி தெரிவித்தார்.
இந்த புதிய நெடுஞ்சாலை இன்று பின்னிரவு 12.01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். காப்பாரிலிருந்து கோல சிலாங்கூர், அசாம் ஜாவாவிற்கு 15 நிமிடத்தில் சென்றந்து விட முடியும். தற்போது, ஜாலான் கிள்ளான் - கோலசிலாங்கூர் சாலையில் காப்பாரிலிருந்து அசாம் ஜாவிற்கு வாகனத்தில் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் 45 நிமிடமாகும்.
காப்பார்,டோக் முடா, சுங்ஙை செர்டாங், ஜெராம், சசாரான் ஆகியவற்றை கடந்த அசாம் ஜாவாவை சென்றடைய வேண்டியுள்ளது. புதிய நெடுங்சாலையில் 15 நிமிடத்தில் சென்றடைந்து விட முடியும். போக்குவரத்து நேரத்தை 30 நிமிடம் குறைக்க வல்லதாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது என்று நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
பந்திங் - தைப்பிங் நெடுஞ்சாலை அடுத்த ஆண்டில் போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








