போர்ட்டிக்சன், செப்டம்பர்.04-
இரண்டு சிறார்கள், தங்களது தாய், தந்தையுடன் சென்ற வாகனம், சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் அந்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.44 மணியளவில் போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸ் ஆற்றுப் பாலத்தில் நிகழ்ந்தது.
நிசான் தியானா ரக வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் வாகனத்துடன் ஆற்றில் விழுந்த 40 வயது மதிக்கத்தக்க கணவன், மனைவியைப் பொதுமக்கள் துரிதமாகக் காப்பாற்றிய வேளையில் அந்த இரண்டு சிறார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆறு மற்றும் எட்டு வயதுடைய சிறுவனும், சிறுமியும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு, மீட்புப் படையினர், பொது தற்காப்பு படையினர் அந்த இரண்டு சிறார்களைத் தேடும் பணியை முழு வீச்சில் முடுக்கியுள்ளனர்.








