Oct 9, 2026
Thisaigal NewsYouTube

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸில் இருந்து மணிலாவுக்கு தனியார் விமானம் மூலம் 521 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற சம்பவத்தின் பின்னணியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் வெளியிட்டுள்ள தகவலில், அந்த நபர் லாவோஸில் இருந்து பிலிப்பைன்ஸில் சரக்குகளை எடுத்துச் செல்ல விமானத்தை 49,500 அமெரிக்க டாலர் செலவில் வாடகைக்கு ஏற்பாடு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரைக் கண்டறிந்து கைது செய்வதற்கு உதவும் வகையில், மலேசிய போலீசார் அவரைப் பற்றிய தகவல்களை பிலிப்பைன்ஸ் போதைப் பொருள் தடுப்பு முகமையிடம் பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கடத்தல் முயற்சியில் விமான நிறுவன உரிமையாளர்களுக்குத் தொடர்பு உள்ளதா அல்லது அவர்களுக்குத் தெரியாமல் நிறுவனத்தின் சட்டபூர்வமான விமானச் சேவை பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுபாங் விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் அந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த விமானி, மலேசியத் துணை விமானி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் இருந்ததாக ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கடத்தல் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காக அந்தப் பயணி அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும், அவர் சிங்கப்பூரிலிருந்து பயணித்து விமானத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மலேசியத் துணை விமானி லாவோஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற மலேசிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அதேவேளையில், போதைப்பொருள் மலேசியாவிலிருந்து லாவோஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், கோல்டன் டிரையங்கல் பகுதியில் இருந்து இலக்கு இடத்துக்குக் கடத்துவதற்கு விமானச் சேவை பயன்படுத்தப்பட்டதாகவும் ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தில் 521 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை லாவோஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தக் கடத்தல் முயற்சி தொடர்பாக லாவோஸில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →