கோலாலம்பூர், நவம்பர்.28-
தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன், நேற்று தனது நான்காம் தலைமுறை புதிய புரோட்டடோன் சாகா காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது.
38,990 ரிங்கிட் ஆரம்ப விலையோடு விற்பனைக்கு வரவுள்ள இந்த காரானது Standard, Executive மற்றும் Premium என மூன்று தரநிலைகளுக்கு ஏற்ப 44,990 ரிங்கிட் மற்றும் 48,990 ரிங்கிட் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இக்காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரிங்கிட் தள்ளுபடியுடன் கூடுதல் ஊக்கத் தொகையையும் வழங்கவுள்ளது.
இந்த காருக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே இதுவரை 20,000 முன்பதிவுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக புடோட்டோன் தலைவர் டான் ஶ்ரீ சையிட் ஃபைசால் அல்பார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 1985-ஆம் ஆண்டிலிருந்து மலேசியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சாகா மாடலானது, பலருக்கும் தங்களது முதல் காரை வாங்கும் வாய்ப்பை வழங்குவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, தலைமுறைகளைக் கடந்தும் சாகா காரானது மலேசியர்களால் விரும்பப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் ஸாஃருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.








