கோலாலம்பூர், பிப்ரவரி.15-
தலைநகரில் உள்ள உயரமான கட்டடங்களுக்கு இடையே வாகனங்களின் உருமாற்றப்பட்ட புகைப்போக்கிகளால் ஏற்படும் அதீத சத்தம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகவும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓப் செலாமாட் 25 எனும் சிறப்பு சோதனையின் கீழ், நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 70 மோட்டார் சைக்கிள்களும் 40 கார்களும் காவற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலன் விராசணை பிரிவின் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸாம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.
இந்தச் சோதனையில், விதிகளுக்குப் புறம்பாக வாகனங்களை உருமாற்றியது, சத்தமான புகைப்போக்கிகளைப் பயன்படுத்தியது, பதிவு எண்களில் மாற்றம் செய்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 720 அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் துறையுடனும் போதைப்பொருள் ஒழிப்பு முகமையுடனும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், போதைப் பொருள் வைத்திருந்த சில நபர்களும் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் அதீத சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக இத்தகையச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என முஹமட் ஸாம்ஸுரி மேலும் கூறினார்.








