புத்ராஜெயா, ஜூலை.14-
நீதித்துறை மாண்பைக் காப்பதற்காக வழக்கறிஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகலில் புத்ராஜெயாவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பேரணியில் பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா கலந்து கொண்டு அந்தப் பேரணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை அரசிலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஆதரிக்கிறார் என்று நூருல் இஸ்ஸா குறிப்பிட்டார்.
உதா நிற பாஜூ குருங் ஆடையில் காணப்பட்ட நூருல் இஸ்ஸா, பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம் என்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை ஏந்திய வண்ணம், பேரணி பங்கேற்பாளர்களுடன் புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்திலிருந்து பிரதமர் அலுவலகத்தை நோக்கிக் கூட்டத்தோடு கூட்டமாக நடந்து சென்றது பெரும் கவன ஈர்ப்பாக மாறியது.
தம்மைப் பொறுத்தவரையில் பிகேஆர் கட்சியின் போராட்டத்திற்கு அடித்தளமாக விளங்கியது சீர்திருத்தம் மற்றும் நீதித்துறையின் மாண்பாகும். அவை மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை நூருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.








