கோலாலம்பூர், ஜனவரி.17-
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆயுதப்படை மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் அனைத்துக் கொள்முதல் முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளது குறித்து, தற்காப்பு அமைச்சு மேலதிக தகவல்களையும், விளக்கங்களையும் கோரி வருகின்றது.
பிரதமரின் உத்தரவை அமைச்சு கட்டாயம் பின்பற்றும் என்றாலும் கூட, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பு, நிதி விதிமுறைகள் மற்றும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப அதைச் செயல்படுத்துவது குறித்த விவரங்களை ஆராயும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்புத் தயார் நிலையும், அதன் செயல்பாடுகளின் தொடர்ச்சியும் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் நடவடிக்கைகளின் மீது, இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.








