பூஜைப் பொருட்கள் தயாரிப்பு விற்பனை நிறுவனமான 'KVS இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் மீது, 16,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான விற்பனை வரி நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதாக இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
45 வயதுடைய மோகனதாஸ் வீரசாமி மற்றும் அவரது தாயாரான 65 வயது சரோஜா தேவி சுப்ரமணியம் ஆகிய இருவரும் நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், அபராதம் உட்பட மொத்தம் 16,145 ரிங்கிட் விற்பனை வரியைச் செலுத்தத் தவறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் மகனும் தாயாரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர். 2018 ஆம் ஆண்டு விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
வழக்கறிஞர் எவரையும் நியமிக்காத நிலையில், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வழக்கறிஞரை நியமிக்கவும் ஏதுவாக வரும் மே 18-ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.








