கோலாலம்பூர், டிசம்பர்.18-
வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு, அவருக்குச் சாதகமாக அமைந்தால், அவர் உடனடியாகத் தனது வீட்டிற்குச் சென்று தண்டனையின் மீதமுள்ள காலத்தைச் கழிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று கோடி காட்டியுள்ளார்.
அதே வேளையில் நீதிமன்றத் தீர்ப்பு நஜீப்பிற்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில், சிறைத்துறை அதிகாரிகளோ அல்லது உள்துறை அமைச்சோ அவரை விடுவிப்பதில் தேவையற்ற தாமதத்தைச் செய்யக்கூடாது என வழக்கறிஞர் ஷாஃபி வலியுறுத்தினார்.
அரசாங்கம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், அது நஜீப்பின் விடுதலையைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்று ஷாஃபி வாதிட்டார். ஏனெனில், இது முழுக்க முழுக்க ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த விஷயம் என்பதால், தீர்ப்பு வந்த உடனேயே அது அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஷாஃபி சுட்டிக் காட்டினார்.
தற்போது காஜாங் சிறையில் உள்ள நஜீப், இந்தத் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் சிறையிலிருந்து வெளியேறித் தனது இல்லத்திலேயே தங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஷாஃபி இதனை வலியுறுத்தினார்.
இந்த வழக்கு, நஜீப் வீட்டுக் காவலில் தனது சிறைத் தண்டனையைக் கழிப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டதாகும் என்பதை ஷாஃபி சுட்டிக் காட்டினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஜீப்பின் தண்டனைக் குறைப்பு குறித்து முன்னாள் மாமன்னர் முடிவெடுத்த போது, அதனுடன் ஒரு "கூடுதல் அரசாணை" பிறப்பிக்கப்பட்டதாக நஜீப் தரப்பு வாதிடுகிறது. அந்த ஆணையில், நஜீப் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்காமல், வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய ஓர் உத்தரவு இருப்பதை அரசாங்கமும், சிறைத்துறையும் தன்னிடம் இருந்து மறைப்பதாக நஜீப் குற்றம் சாட்டினார். அந்த ரகசிய அரசாணையைச் செயல்படுத்தக் கோரி அவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த "கூடுதல் அரசாணை" உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தவும், அது இருந்தால் அதனை உடனடியாக அமல்படுத்தி, தன்னை வீட்டுக் காவலுக்கு மாற்ற வேண்டும் என்பதே நஜீப் தொடுத்துள்ள இந்த வழக்கின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கான விடையை வரும் திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றம் காலை 10 மணியளவில் வழங்கவிருக்கிறது.








