கோலாலம்பூர், பிப்ரவரி.20-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குரிமை புகார்கள் குறித்து போலீசார் விசாரணையை மையப்படுத்த வேண்டுமே தவிர, புளூம்பெர்க் அறிக்கை வெளியான விதம் குறித்து அல்ல என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளின்படி, எழுப்பப்பட்ட புகார்களின் சாராம்சம் குறித்து போலீஸ் விசாரணை அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
"புளூம்பெர்க் எழுப்பிய புகார்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும், அந்த அறிக்கை வெளியான விதம் குறித்து அல்ல. இதன் பொருள் மிகவும் எளிமையானது. ஒரு புகார் இருந்தால், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டும்; அது எப்படி பிரசுரிக்கப்பட்டது என்பதில் கவனம் செலுத்தக்கூடாது. அந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்," என்று நூருல் இசா தனது டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.








