கோலாலம்பூர், ஜூலை.28-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப் படத்திற்குப் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஜுலை 26 ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பேரணி எவ்வித அசம்பாவிதமின்றி நடைபெற்றாலும், பிரதமர் அன்வாரின் உருவப் படத்தை இரண்டு நபர்கள், பிரம்பால் அடித்து, மக்களின் கவன ஈர்ப்பு செய்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதாக டத்தோ முகமட் உசுஃப் குறிப்பிட்டார்.
முன்பு தாங்கள் அறிவித்தது போல் அந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஆனால், அதில் எந்தவொரு குற்றச்செயல்களும் நிகழுமானால் போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிரம்படித் தண்டனை நிறைவேற்றம் குறித்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.








