தாவாவ், டிசம்பர்.15-
தாவாவ் மாவட்டம் கம்போங் ஶ்ரீ அமான் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதியில் வசித்து வந்த பலர், வீட்டை விட்டு வெளியேற வழியின்றி, கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
நேற்று இரவு 11.23 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், கிட்டத்தட்ட 30 வீடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
மரம் மற்றும் ஒட்டுப் பலகையால் வடிவமைக்கப்பட்டிருந்த அவ்வீடுகள் அனைத்தும் முற்றிலும் எரிந்து தீக்கிரையானதாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கமாண்டர் சுஹெய்ஸான் சாஹாக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நள்ளிரவு 12.44 மணியளவில் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிகாலை 3.10 மணியளவில் மீண்டும் தீப்பற்றக்கூடிய அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் குடியிருப்பாளர்கள் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள சுஹெய்ஸான் சாஹாக், தீப் பற்றியக் காரணம் குறித்தும், சேத நிலவரம் குறித்தும் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.








