மலேசியாவில் பிறந்து வளர்ந்தவரான ஜேன் செலியா - மன்னிங் , பிரிட்டிஷ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக யுனைடெட் கிங்டமில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஜேன் செலியாவிற்கு ஓர்டெர் ஒஃப் தெ பிரிட்டிஷ் எம்பாயார் எனும் உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு சேவையில் கலை மற்றும் அறிவியல் துறையில் சாதனைப்படைக்கும் தனி நபர்களுக்கு மட்டுமே யுனைடெட் கிங்டமின் இந்த உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்படும்.
பெட்டாலிங் ஜெயாவிற்கு பிறந்து வளர்ந்தவரான 60 வயதான ஜேன் செலியா, யுனைடெட் கிங்டமில் ஓர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். வர்த்தக, ஆள்பல மற்றும் தொழில்துறைக்கான இலாகாவின் கொள்கை வரைவு பிரிவின் தலைவராக ஜேன் செலியா பொறுப்பு வகித்து வருகிறார்.
ஜேனின் தந்தை மறைந்த ஜோன் செல்லையா, மலேசியாவில் தோட்டத் தொழில்துறை மற்றும் தொழிற்சங்க வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக விளங்கியவராவார். அவர், மாப்பா ( MAPA ) எனப்படும் மலேசிய தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தில் உயரிய பொறுப்பு வகித்தவர்.
மாப்பாவிற்கும், தேசிய தோட்டத் தொழிற்சங்கமான NUPW க்கும் இடையில் நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு சம்பளம் ஒப்பந்தம் தொடர்பாக மாபா சார்பில் அதிகமாக பேச்சுவார்த்தைகளில் ஜோன் செல்லையா கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








