குவாந்தான், நவம்பர்.23-
நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த கேங் மூசாங் கும்பலின் தலைவன் உட்பட இருவர், இசிஆர்எல் தொடர்வண்டித் திட்டத்தின் கேபிள்கள் திருடப்பட்ட வழக்கில், தெமர்லோவில் கைது செய்யப்பட்டனர். கம்போடிய நாட்டவரான மூசாங் என்றழைக்கப்படும் 32 வயது இளைஞனும், செபெட் என அறியப்படும் 36 வயது உள்ளூர் இளைஞனும் கடந்த வியாழக்கிழமை இரவு மெந்தாக்காப், கம்போங் பத்து 3வில் வைத்துப் பிடிக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் போதைப்பொருளும் வெட்டு ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சோதனையில் இருவரும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாகவும், உள்ளூர் இளைஞனுக்கு ஆறு குற்றப் பின்னணிகள் இருப்பதாகவும் தெமர்லோ காவற்படையின் தலைவர் உதவி ஆணையர் முகமட் நஷிம் பாஹ்ரோன் தெரிவித்தார். இந்தக் கும்பலின் முக்கிய நபர் பிடிபட்டதன் மூலம், கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 2025 வரை தெமர்லோ, பெந்தோங் ஆகிய பகுதிகளில் நடந்த ஐந்து இசிஆர்எல் கேபிள் திருட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் கும்பல் முற்றிலும் முடக்கப்பட்டதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








