புத்ராஜெயா, நவம்பர்.03-
ஊடகவியலாளர்களிடம் மனம் திறந்த மன்னிப்புக் கோரிய வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், நல்லெண்ண அடிப்படையில் ஊடகங்களிள் பிரதிநிதிகளை இன்று சந்தித்தார்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள ங்காவின் அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மலேசிய பத்திரிகையாளர் சங்கமான NUJM, மலேசிய ஊடகவியலாளர் மன்றம் உட்பட பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் என்ற முறையில் தாம் இடம் பெற்றுள்ள மடானி அரசாங்கம், ஊடகச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், பத்திரிகையாளர்களை ஓரங்கட்டும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் ங்கா விளக்கினார்.
தமது அமைச்சுக்கும், ஊடகங்களுக்கும் இடையில் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற I Lite U எனும் ஒளியூட்டும் திட்டம் தொடர்பாக தாம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அமைச்சர் ங்கா, நேற்று ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பைக் கேட்டுக் கொண்டார்.
தாம் வெளியிட்ட கருத்து குறித்து பல தரப்பினர் குறை கூறியுள்ளனர். ஆக்ககரமான கருத்துகள் அனைத்தையும் தாம் திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்வதாக ங்கா குறிப்பிட்டு இருந்தார்.
தகவல் ஊடக நண்பர்கள் எவரின் மனத்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ங்கா தெரிவித்து இருந்தார்.








