Oct 9, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் 17 கோடி ரிங்கிட் ரொக்கம், 16 கிலோ தங்கக் கட்டிகள் பறிக்கப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் 17 கோடி ரிங்கிட் ரொக்கம், 16 கிலோ தங்கக் கட்டிகள் பறிக்கப்படுகின்றன

புத்ராஜெயா, ஜூன்.25-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான 17 கோடி ரிங்கிட் ரொக்கம் மற்றும் 16 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சப்ரியின் நம்பிக்கைக்கு உரிய முன்னாள் அதிகாரியின் பாதுகாக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரிங்கிட் மற்றும் தங்கக் கட்டிகள் குறித்து எஸ்பிஆர்எம் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதன் தொடர்பில் அந்தப் பணத்திற்கும், தங்கக் கட்டிக்கும் உரிமைப் பெற்று இருந்த இஸ்மாயில் சப்ரியிடமிருந்து அந்த சொத்துக்கள் அகற்றப்படுவதற்கு உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை எஸ்பிஆர்எம் தாக்கல் செய்யவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு, இஸ்மாயில் சப்ரி யாக்கோப், எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டார்.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக எஸ்பிஆர்எம் விசாரணை முடிவுற்றது. அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இனி நடவடிக்கை எடுப்பது சட்டத்துறை அலுவலகத்தைப் பொறுத்ததாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

17 கோடி ரிங்கிட் ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகள் தொடர்புடைய தனது சொத்துக்களை நியாயமான வழியில் சம்பாதித்துள்ளதாக இஸ்மாயில் சப்ரி கருதுவாரேயானால், எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ள நீதிமன்ற நடவடிக்கையை எதிர்த்து அவர் சவால் விடலாம் என்றும் அஸாம் பாக்கி விளக்கினார்.

எனினும் இதுவரையில் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

ஒரு ரப்பர் பால் மரம் வெட்டும் தொழிலாளியின் மகனான 65 வயதுடைய இஸ்மாயில் சப்ரி, நாட்டின் பிரதமராக 14 மாதங்களே பொறுப்பேற்றிருந்த நிலையில் அவருக்கு 17 கோடி ரிங்கிட் ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகள் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →