கோலாலம்பூர், நவம்பர்.25-
கோலாலம்பூர், தாமான் மாலூரியில் உள்ள ஆம்பேங்க் கிளை வங்கிக்கு வெளியே வீடற்றவர் என்று நம்பப்படும் ஒருவர் உறங்கிக் கொண்டு இருந்த போது அவர் மீது தண்ணீர் பாய்ச்சி, அந்த நபரை எட்டி உதைத்து, விரட்டும் காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்காக அந்த முன்னணி வங்கி இன்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இந்தச் சம்பவத்தால் "ஆழ்ந்த கவலையும் வருத்தமும்" அடைவதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே வேளையில் வங்கியின் வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பே அதன் முதன்மையான முன்னுரிமை என்று வலியுறுத்தியுள்ளது.
"நடந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், கவலையடைந்துள்ளோம். எந்தவொரு நபரையும் இந்த முறையில் நடத்தக்கூடாது. இதன் தொடர்பில் அனைத்து தரப்பினருடன் வங்கி ஒத்துழைப்பு நல்கும். இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதே எங்களின் நோக்கம்" என்று ஆம்பேங்க் தெரிவித்துள்ளது.
ஆம்பேங்க்கின் கட்டட வளாக நடைப்பாதையில் உறங்கிக் கொண்டு இருந்த வீடற்ற நபர் மீது அதன் பெண் பாதுகாவலர் குழாய் நீரைப் பாய்ச்சியதுடன் அங்கு வந்த செருப்பு தைப்பவர் ஒருவர், அந்த நபரை எட்டி உதைத்து, அவர் மீது குழாய் நீரைப் பாய்ச்சிய சம்பவம் வலைவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஈவு இரக்கமின்றி மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடந்து கொண்ட அந்த கொடியச் செயலுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆம்பேங்கின் கூற்றுப்படி, வீடியோ கிளிப்பில் உள்ள பாதுகாவலர், வங்கியின் வெளிப்புற பகுதியைக் கண்காணிப்பதற்கு வங்கியால் நியமிக்கப்பட்ட பெண் ஊழியர் ஆவார். மற்றொருவர் வங்கிக்கு அருகில் நடைப்பாடையில் அமர்ந்து இருக்கும் செருப்புத் தைப்பவர் என்று அந்த வங்கி விளக்கம் அளித்துள்ளது.








