ரொம்பின், செப்டம்பர்.06-
தனது உடலில் ஏற்பட்டுள்ள பிணியைப் போக்குவதற்கு உதவுவதாகக் கூறிய போமோ ஒருவரிடம் மாது ஒருவர் ஒரு லட்சத்து மூவாயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் முதல் தேதி சமூக ஊடகத்தில் அறிமுகமான அந்த போமோ, செய்வினையால் பாதிக்கப்பட்ட அந்த மாதுவின் பிரச்னைக்கு மாந்திரீக முறையில் தீர்வு காண முடியும் என்று கூறி மோசடி செய்துள்ளார்.
முட்டை மற்றும் உப்பைப் பயன்படுத்தியே அந்த செய்வினையை அகற்ற முடியும் என்று கூறி, பூகாவ் முறையில் அந்த மாதுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட மாது தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார் என்று ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் மொண்டோல் தெரிவித்துள்ளார்.
தன்னை அறியாமலேயே அந்த போமோ கேட்ட ரொக்கப் பணத்தையும், நகைகளையும் ஒப்படைத்துத் தாம் மோசம் போனதாக அந்த மாது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஷாரிஃப் மொண்டோல் குறிப்பிட்டார்.








