Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வணிகத் திட்டத்தின் வாயிலாக இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிர்களின் வர்த்தகத்தை எஸ்எம்இ வங்கி துணை நிற்கிறது, துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் புகழாரம்
தற்போதைய செய்திகள்

வணிகத் திட்டத்தின் வாயிலாக இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிர்களின் வர்த்தகத்தை எஸ்எம்இ வங்கி துணை நிற்கிறது, துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் புகழாரம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.26-

வணிகத் திட்டத்தின் வாயிலாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் வர்த்தகத்தை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதில் எஸ்எம்இ வங்கி துணை நிற்கிறது என்று தொழில் முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் புகழாரம் சூட்டினார்.

இந்திய வணிகர்கள் தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், அதற்கானக் கட்டமைப்பை விரிவுப்படுத்திக் கொள்வதற்கும் எஸ்எம்இ வங்கியின் வாயிலாக 140 மில்லியன் ரிங்கிட் வரை கடன் உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக வணிகம் எனும் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கு எஸ்எம்இ வங்கியின் வாயிலாக முதலில் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த தொகை 140 மில்லியன் ரிங்கிட்டாக ஒதுக்கீடு செய்ப்படுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்தியர்களுக்கான இந்த வணிகப் பிரிவு வாயிலாக எஸ்எம்இ வங்கி, இவ்வாண்டு மே மாதம் வரையில் மொத்தம் 125.6 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை அங்கீகரித்துள்ளது.

இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் ஜீவாதாரத்தையும், அவர்களின் வளர்ச்சியையையும் ஆதரிப்பதில் மடானி அரசாங்கம் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளது என்பதையே இந்து நிரூபிக்கிறது என்ற டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இன்று இந்தியர்களுக்கான வணிகத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி உதவி வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தது 1 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 3 லட்சம் ரிங்கிட் வரை கடனுதவிக்குக் கேட்டு, இந்திய வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன் அடிப்படையில் இன்று 8 நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 2 மில்லியன் ரிங்கிட் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. பயன் பெற்றவர்கள், இந்த நிதி உதவித் திட்டம் குறித்து மற்ற இந்திய வணிகர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.

வணிகத் திட்டத்தின் வாயிலாக எஸ்எம்இ வங்கி வழங்கிய கடனுதவி தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்ததாக இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மற்றும் நிதி உதவி பெற்றவர்கள் விவரித்தனர்.

லோஜிஸ்டிக், போக்குவரத்து, பயனீட்டாளர் பொருட்கள் , உள்ளூர் மசாலாப் பொருட்கள், தகவல் தொடர்பு பொறியியல், அழகு சாதனப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களை சேர்ந்த இந்தியர்கள் எஸ்எம்இ வங்கியின் மூலம் பலன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.

Related News