கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
சபா, பாபாரில் முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மரண விவகாரத்தில் மிக முக்கியப் பிரமுகர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் மறுத்துள்ளார்.
மாணவியின் மரண விவகாரத்தில் எந்தவொரு மிக முக்கிய நபருக்கும் தொடர்பில்லை என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியிருப்பதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பில் சில முக்கிய விவகாரங்களைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கட்டொழுங்கு ஆசிரியர் மூடி மறைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுவது குறித்து கேட்ட போது அது குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.








