இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு சீர்திருத்த மைய வாசிகள், தடுப்புக் காவலில் உள்ளவர்கள், Henry Gurney பள்ளியைச் சேர்ந்தவர்கள், சிறைக் கைதிகள் ஆகியோர் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்க நவம்பர் 14, 15 ஆம் தேதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சிறைத் துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக, இந்து சமயத்தைச் சார்ந்தவர்களுக்கே இந்த அனுமதியில் முன்னுரிமை வழங்கப்படும் என அத்துறை குறிப்பிட்டுள்ளது.
நேரில் சந்திக்கவிருக்கும் குடும்பங்கள் காலை 8.15 முதல் மாலை 4.15 மணி வரை சந்திக்கலாம் எனவும் தொலைபேசி வழி பேச முடிவு செய்துள்ள குடும்பங்கள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர் எனவும் சிறைத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கைதியின் குடும்பத்தார் ஒரு முறை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சிறைத் துறையின் இனையப்பக்கம் உள்ள i-Visit வாயிலாகவோ அல்லது. தொலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்த பின்னர் கைதியைச் சந்திக்க குறிப்பிட்ட தேதியையும் நேரத்தையும் சிறைத் துறையினர் தெரிவிப்பர். நேரில் சந்திக்கவிருக்கும் குடும்பத்தார் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே RT-PCR அல்லது RTK-Ag பரிசோதனையை மேற்கொண்டு தொற்று கண்டிராதவர் என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சந்திப்பு அட்டையும் அடையாள அட்டையையும் தவறாமல் கொண்டு வர வேண்டும் எனவும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.








