கோலாலம்பூர், ஜனவரி.30-
வரும் பிப்ரவரி முதல் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருநாளையொட்டின் நாட்டின் பிரதான ஆலயமான பத்துமலைத் திருத்தலத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் வருகை புரிந்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.

பிரதமருக்கு டான் ஶ்ரீ நடராஜா மாலை அணிவித்து சிறப்பித்தார். மனித வள அமைச்ச டத்தோஸ்ரீ ஆர். ரமணன், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சங் டியோ, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் உடன் காணப்பட்டனர்.

இந்த வருகையின் போது, திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் தூய்மைப் பணிகள் முதலிய முன்னேற்பாடுகளை டான் ஶ்ரீ நடராஜாவிடம் நேரடியாக பிரதமர் கேட்டறிந்தார்.

மலேசியாவின் பல்லின கலாச்சார ஒருமைப்பாட்டையும், 'மலேசியா மடானி' (Malaysia MADANI) தத்துவத்தின் கீழ் இந்திய சமூகத்தின் மீதான அரசாங்கத்தின் அக்கறையையும் பிரதமரின் இந்த வருகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.








