கோலாலம்பூர், செப்டம்பர்.11-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களைத் தேடும் பொதுமக்கள், முன்வந்து அடையாளம் காணுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், 20 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அப்பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததை செர்டாங் மருத்துவமனை தடயவியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக கேஎலைஏ மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மான் ஷாரியாட் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால், இது குறித்து தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








