மலேசிய இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக, மித்ரா இலாகாவின் கீழ் 65.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ள மலேசியா மடானி அரசாங்கத்திற்கு மலேசிய இந்திய இளைஞர் மன்றம் தனது முழு ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, இந்தியச் சமூகம் நாட்டின் பிரதான வளர்ச்சிப் பாதையிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை ஒரு தெளிவான சான்றாகக் காட்டுகிறது என மலேசிய இளைஞர் மன்றத்தின் துணைத் தலைவரும், மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தேசியத் தலைவருமான தனேஷ் பசில் தெரிவித்தார்.
குறிப்பாக, பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான 'செலிக் மடானி' எனும் ஆரம்பக் கல்வி மானியத் திட்டம் மற்றும் 'கல்வி மடானி' எனும் இலவச டியூஷன் வகுப்புத் திட்டம் ஆகியவற்றை இளைஞர்களும் மாணவர்களும் பெரிதும் வரவேற்கின்றனர்.
ஆரம்பக் கட்டத்திலிருந்தே கல்வியில் முதலீடு செய்வது, வறுமைச் சங்கிலியை உடைப்பதற்கும் இளைஞர்களிடையே சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் மிகச் சிறந்த வழியாகும் என்று தனேஷ் பசில் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையோடு மட்டுமன்றி, பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கான 50,000 ரிங்கிட் வரையிலான 'உயர்வு மடானி’ தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டத்தையும் மன்றம் வரவேற்றுள்ளது.
இது டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மின்-வணிகம் போன்ற புதிய துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (திவெட்) போன்ற திட்டங்களை மித்ரா மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நாடு முழுவதும் 123 கிளைகளைக் கொண்டுள்ள மன்றம், அடிமட்ட அளவில் கொண்டுள்ள நீண்டகால அனுபவத்தின் மூலம் இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மித்ராவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக உள்ளது என தனேஷ் பசில் மேலும் கூறினார்.









